அனிதாவின் ஆன்மா…!

நான் அனிதாவின் ஆன்மா பேசுகிறேன்…!

 

அனைவருக்கும் வணக்கம்…

நான் 1176/1200 அனிதாவின் ஆன்மா பேசுகிறேன். நீங்கள் பயப்படவேண்டாம். உங்களின் ஆன்ம விருப்பத்தின் ஒரு குரலாக இங்கே நான் பேச இருக்கிறேன். வழக்கமாக உயிரோடு இருப்பவர்கள்தான் இறந்த ஆன்மாவோடு பேசினேன் என்று சொல்வார்கள், இது என்னடா புதுசா இறந்து போன அனிதாவின் ஆன்மா தானாக முன்வந்து உயிரோடு இருப்பவர்களோடு பேசுதேன்னு நினைக்கிறீர்களா ? என்னுடைய ஆன்மாவோடு பேச எவரும் தயாராக இல்லை, அதான் நானே உங்க கூட பேச வந்துட்டேன்.

அண்ணா இறந்த பிறகு அவரின் ஆன்மாவோடு எம்.ஜி.ஆர் பேசினார். அண்ணாவின் ஆன்மாவோடு எம்.ஜி.யார் பேசியதற்கு ஒரு இலாபநோக்கம் இருந்தது. எம்.ஜி.யாரின் சமாதியில் அவரின் ஆன்மாவோடு ஜெயலலிதா பேசியதற்கும், ஜெயலலிதா சமாதியில் அவரின் ஆன்மாவோடு ஓ.பி.ஸ், இ.பி.ஸ் பேசுவதற்கும், ஜெயலலிதாவா சமாதியில் சத்தியம் செய்து சசிகலா சபதமேற்பதற்கும் ஒரு இலாபநோக்கம் இருந்தது. என்னுடைய ஆன்மாவோடு பேசுவதில் எந்த இலாபமும் எவருக்கும் கிடைக்காது என நான் அறிவேன். ஒருவேளை சிலர் எனது ஆன்மாவோடு பேசமுன்வந்தாலும் அவர்களுக்கு பேரிழப்பு நேரிடும் என்பதை உணர்ந்தே யாரும் எனது ஆன்மாவோடு பேசத் தயாராக இல்லை என்பதை நான் அறிவேன். ஆகவே, நானே உங்களோடு பேசவந்தேன்.

யூதர்களால் கொலைசெய்யப்பட்ட ஏசு மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார் என்பார்கள். நான் அப்படியல்ல இறந்த மறுநொடியே, எனது இறப்பின் செய்திகேட்ட ஒவ்வொருவர் இதயத்திற்குள்ளும் உயிர்த்தெழுந்தேன். அவர்களின் புறவாழ்க்கையும், மனசாட்சியும் மல்லுக்கட்டிக்கொண்ட தருணங்களில் எனது இறப்பின் நியாயதர்மங்கள் போதிக்கப்பட்டது. எனது “ஆன்மா” உங்களோடு பேசுவதை நான் விரும்பவில்லை. ஆனால், இந்த ஆகாயவீதியில் என்னோடு அருகே அமர்ந்து இருக்கின்ற அண்ணன் முத்துக்குமார், அக்கா செங்கொடி, அண்ணன் காவிரிச்செல்வன் விக்னேஷ் என எல்லோரும் அவர்களின் கதையையும் என்னோடு பகிர்ந்துகொள்ளவே, அவர்களின் சார்பாகவும் என் ஆன்மா உங்களோடு பேச இருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த அனிதா அருகே இருக்கும் மூவரோடு சமமானவள் இல்லை. ஏனெனில், 2009இல் நிகழ்ந்த ஈழப்படுகொலையை தடுக்கும் பொருட்டு தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு தன்னைத்தானே தீயில் எரித்தார் அண்ணன் முத்துக்குமார். 2011இல் அக்கா செங்கொடி எழுவர் உயிர்காக்க, அவர்களின் விடுதலையை நோக்கிய போராட்டக் களத்திற்கு மக்களை அணியப்படுத்த தீயில் எரிந்தார். 2016இல் காவிரிப் பிரச்சனையில் தமிழர்களைத் தொடர்ந்து அவமதிக்கும் செயல்களை எதிர்த்து போராடத் தமிழர்களை அணியப்படுத்த தன்னைத்தானே எரித்துக்கொண்ட காவிரிச்செல்வன் விக்னேஷ் என இந்த மூவரும் ஒரு பொதுநோக்கத்திற்காக இறந்து போனவர்கள். நானோ சுயநோக்கு நிரம்பிய பொதுநோக்கிற்காக இறந்து போனவள். ஆனால், எங்கள் நால்வரின் இறப்பின் நோக்கமும் ஒன்றுதான். “தமிழர்களை இனநலம் காக்கும் போராட்டத்திற்கு அணியப்படுத்துவோம்” என்பதே எங்கள் நோக்காக இருக்கிறது. சரி! நேரடியாக செய்திக்கு வருகிறேன்.

எனது இறப்பிற்கு பலர் வருந்தினீர்கள்; பலர் அழுதீர்கள்; சிலர் விமர்சித்தீர்கள்; சிலர் என் இறப்பை கொண்டாடுனீர்கள்; சிலர் எனது இறப்பைக் கொச்சைப்படுத்தினீர்கள்; சிலர் தனது ஆற்றாமையில் கோபமுற்றுறீர்கள். நான் இறந்து போனது செப்டம்பர் 1 தேதி. எனது இறப்பைக் கேட்ட நொடியில், எனது சவத்தை பார்த்த நொடியில் என் இறப்பிற்குக் காரணமாக இருந்த அரசியலில் உங்களுக்கு இருந்த கோபம், விரோதம், ஆற்றாமை இன்றுவரை குறையாமல் அப்படியே இருக்கிறதா என்ற கேள்வியை உங்களிடம் முன்வைக்கிறேன். இருக்கிறது என்றால் மகிழ்கிறேன். உண்மையில் இல்லைதானே !

இறந்துபோன என் பிணத்தின் மீது மொய்த்த ஈக்களைவிட பிணந்தின்னும் அரசியல்வாதிகள் அதிகம் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? எனது பிணத்திற்கு அரசியல்வாதிகள் வீரவணக்கம் செலுத்துவதில் நான் வருந்தவில்லை. ஆனால், அரசியலின் சுயஇலாப தேவைக்காக வந்தவர்களை எப்படி சகிப்பது? சரி! வந்தீர்கள். வீரவணக்கம் செய்தீர்கள். சபதமேற்றீர்கள். சபதம் வெல்ல என்ன செயல்திட்டம் இருக்கிறது உங்களிடம் ? 2009 இல் இறந்துபோன இதோ ஆகாயவீதியில் என்னருகே இருக்கும் அண்ணன் முத்துக்குமாரின் சவத்தின்மீது செய்த சத்தியங்கள் உங்களுக்கு நியாபகம் இருக்கின்றதா ? உங்கள் முன்னே அன்று சாம்பலாக இருந்த அண்ணன் முத்துக்குமார் அதை மறக்காமல் நியாபகம் வைத்திருக்கிறார்.

2009 இல் அண்ணன் முத்துக்குமார் மீது ஏற்ற சபதம், சத்தியம், 2011 இல் அக்கா செங்கொடி மீது செய்த சபதம், 2016 அண்ணன் விக்னேஷ் மீது சபதம் எல்லாமே நிலுவையில் இருக்கும் போது இப்போது என்மீது நீங்கள் செய்த சத்தியத்தையும், சபதத்தையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நான் எப்படி நம்புவது ?

“விதியே! விதியே! என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை?” என்று முழங்கியவாறே தமிழ்த்தேசிய இனமாக ஒன்றிணைந்து போராடுங்கள் என்று இறந்துபோன அண்ணன் முத்துக்குமாரை, அவர் பிணத்தின் மீது செய்த சத்தியத்தை இன்றளவும் எவரேனும் மதிக்கின்றீர்களா ? இல்லையே! எனது இறப்பை, அதன் மீதான இரங்கலைப் பதிவு செய்த பல அரசியல்வாதிகள் என்னை ‘தலித் மாணவி’ என்றுதானே பதிவு செய்தார்கள். அப்படி பதிவுசெய்த அரசியல்வாதிகளை நீங்கள் கண்டித்ததோ, கடிந்ததோ உண்டா? இல்லையே! நான் தலித் மாணவியா ? தமிழ் மாணவியா ? சொல்லுங்கள். என்னை தலித் வட்டத்தில் அடைத்து தனது அரசியல் வாழ்வை பிரகாசமாக்க விரும்பிய சுயநல அரசியல்வாதிககளை நீங்கள் கடிந்ததோ, கண்டித்ததோ உண்டா ? இல்லையே! பிறகு எதற்கு இந்த ஏமாற்று இரங்கல் நாடகங்கள்.

எனது இறுதியாத்திரைக்கு எனது ஊருக்கு வந்தவர்களுக்கு தெரியும். எனது வீடு அமைத்திருக்கும் வீதிற்கு அடுத்தவீதி அடுத்த சாதியினருடையது என்று. எனது இறப்பின் இரங்கல் அழுகுரல் ஒரு வீதியிலும், அடுத்த சாதியின் ஆனந்தக் கொண்டாட்டங்கள் அடுத்தவீதியிலும் நடந்ததே சாதிய இறுக்கத்திற்குச் சான்று. எனது சவப்பட்டியின் அருகே அரங்கேறிய அரசியலின் கோரம் அருவருக்கத்தக்கது. தனது கட்சியின் தலைவரின் வருகைக்காக கணக்குகாட்டவேண்டி வந்தவர்கள், இதை ஒரு அரசியல் சந்திப்பின் ஒன்றுகூடலாக கருதி வந்தவர்கள், மதுவாடை ததும்ப வந்தவர்கள் உண்மையில் ஆற்றொன துயரில் வந்தவர்கள் என வந்தவர்கள் பலரும் பலரகம்.

இறந்துபோன என் உடல் உடற்கூறு சோதனைக்காக அரியலூர் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இரவோடு இரவாக, உடல் கூறுசெய்யவும், உடனேயே உடலை பெற்றுக்கொள்ளவும் கையெழுத்தை மிரட்டி காவல்துறையினர் வாங்கினார்கள். இவை அனைத்தும் எங்கள் ஊர் அதிமுக கொறடாவின் தலைமையில் நிகழ்ந்தது. எனது பெற்றோர்கள் பிணத்தை வாங்க மறுத்து நீதி கேட்கும் போது திருமாவளவன் மருத்துவமணைக்கு வந்தவர் எனது சிறியதாயோடு பேசினார். என்ன பேசினார் என்பதை நான் வெளியிட விரும்பவில்லை. அதுவரை அசிங்கம்பிடித்த அதிமுகவின் அரசியல் பிணமாக இருந்த எனது உடல், தலித் அரசியல்பிணமாகி போனதே சோகவரலாறு. இரவோடு இரவாக அடக்கம் செய்யவேண்டும் என்று முன்பு மிரட்டிய காவல்துறை தரப்பு தலித்-பிணமாக மாற்றப்பட்ட நொடியில் மவுனம் காத்தது. பிறகு, அரசியல்வாதிகள், உணர்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் தொடர் வருகை இப்படியே நடந்தேறியது. இவர்களின் துர்நாற்றம் எடுக்கும் அரசியல் இலாபத்திற்காக எனது உடலையும் நாற்றமெடுக்க வைத்து இரவு 11 மணிக்குமேல் சவக்குழிக்கு கொண்டுசெல்லப்பட்டேன். அரசியல் பிணமென்றாலே நாற்றமெடுக்கும் என்பதை உணர்ந்தேன்.

இருப்பினும் என்மீது அக்கறை கொண்டு, என் பிணத்திற்கு காவல் இருந்த, கண்டுகழித்த, சபதமேற்ற எல்லா அரசியல்வாதிகளிடம் கேட்க என்னிடம் கேள்விகள் இருக்கிறது.

எனது சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தின் பின்புறம் இரங்கல் பதாகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் செய்திகளோடு ஐயா திருமாவளவன் என்னை வணங்குவது போல ஒரு படம். இந்த படத்தின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?. அவர் எனக்கு உறவினரோ, அண்ணனோ, தம்பியோ, எதுவும் கிடையாது. எனது குடும்பத்தில் எவரும் அவரின் கட்சியில்கூட கிடையாது. இப்படி இருக்க எனது பிணத்தின் மீதும், எனது சவத்தின் இறுதி ஊர்வலத்தின் மீதும் விடுதலை சிறுத்தைகள் கொடியை வைப்பதன் மூலமும் அவர் என்ன சொல்ல வருகிறார்? எனது இறப்பின் பொது நோக்கம் தலித் அரசியலாய் முடிந்துவிட வேண்டும் என்பதா? இதற்காகவும், இவருக்காகவுமா நான் இறந்தேன்?. என் ஆன்மாவின் உள்ளுணர்வில் இருந்து ஒன்றை கூறுகிறேன். இவர் ‘தலித்’ உச்சரித்த வார்த்தைக்கு பதிலாக ‘தமிழன்’ என்று உச்சரித்து இருந்தால் இந்நேரம் சமூகநீதி தமிழகத்தில் நிலைத்திருக்கும். எனது இறப்பிற்கு காரணமாக இருந்த ‘நீட்’ தேர்வினை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு கொண்டுவர நினைக்கும்போது, அதன் கூட்டணியில் இருந்த திமுகவின் வலதுகரமாக இருந்த திருமாவிற்கு எனது இறப்பு ஒரு அரசியல் பிணமாக போனதே என்பதே எனது வருத்தம்.

அடுத்ததாக என்னைக் கொலைசெய்தவனே எனக்கு கொள்ளிவைத்த வரலாறு என் கதையில் மட்டுமே நிகழ்ந்தது. ஆமாம்! மாநில உரிமையில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு இந்திரா காந்தி கொண்டு சென்றது திமுகவின் ஆட்சிக்காலத்தில். இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான மருத்துவ நுழைவுத்தேர்வு என்ற செயல்திட்டம் தயாரானது திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில். உண்மைநிலை இவ்வாறு இருக்க நீட் தேர்வின் கொடுமையினால் இறந்துபோன எனக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் வந்தார் ?

பிணம் பேசாது! எதையும் ஆராய்ந்தறிந்து கேள்விகேட்காது என்ற துணிவில்தானே? நான் என்னை மட்டும் சொல்லவில்லை. ஸ்டாலினை இறுதிவணக்கம் செலுத்த அனுமதித்த உங்களையும் சேர்த்ததுதான் சொல்கிறேன். இதையெல்லாம் தாண்டிய கொடுமை என்ன தெரியுமா ? உண்மையில் உணர்வின் அடிப்படையில் போராடிக்கொண்டு இருந்த மாணவர்களை திமுக குண்டர்கள், ஸ்டாலின் வரும்போது போராடுகின்ற இவர்களால் ஏதேனும் எதிர்ப்பு வரும் என்று அறிந்துகொண்டு, போராடுகின்ற மாணவர்களை தாக்கி விரட்டிவிட்டதும், போராடுகின்ற இடத்தில் திமுக குண்டர்களை வைத்து கோஷமிட வைத்ததும் கொடுமையிலும் கொடுமை. இதை அறிந்துகொண்டு நாகரீகமாக கடந்து சென்ற திருமாவின் அரசியல் ஆகசிறந்தது. செயல்தலைவரின் மாலை எனது சவப்பெட்டியின் மீது விழ இரவு 10 மணியாகிவிட்டது. அதன் பிறகு பேட்டிகொடுத்த ஸ்டாலின் நீட் தீர்வை நீக்கும்வரை நாங்கள் ஓயமாட்டேம் என்றதோடு எனது குடும்பத்திற்காக 10 லட்சம் தருவதாக சொல்லி இருக்கிறார்.

திரு ஸ்டாலின் அவர்களுக்கு தான் என்ன செய்கிறோம்? நம்மை மற்றவர்கள் நம்புவார்களா என்பது பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லை. தனக்கு இருக்கும் மக்கள் சக்தியை கோமாளித்தனமாக, அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதே அவருடைய தொடர் செயலாக நீள்கிறது. இவரின் வருகைக்காக சவக்குழிக்கு செல்லவேண்டிய நான் நாற்றமெடுக்க காத்திருந்தது பெருங்கோடுமை. ஆனால், அதையெல்லாம் விட மிகப்பெரிய கொடுமை இவர் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த இருப்பது. என்னைவிட உயர்ந்த நோக்கத்திற்காக இறந்துபோன அண்ணன் முத்துக்குமார் இதோ எதிரே இருக்கிறார். இன்றுவரை முத்துக்குமார் அவர்களின் இறப்பிற்கு துளி இரங்கலை கூட பதிவு செய்யாத இவரையா இன்றும் நம்புகிறது இந்த உலகம் என்ற வினா நீள்கிறது.

எனது பயமெல்லாம் இப்போது ஒன்றுதான். எனது இறப்பினை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய 7 இலட்சம் ரூபாய் பணத்தை வாங்கமறுத்த எனது குடும்பம் எனது இறப்பின் நோக்கத்தை புனிதப்படுத்தியது போலவே இவர் தருகின்ற தொகையையும் வாங்கக் கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். வாங்க மாட்டார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

அடுத்ததாக தினகரன் ஐயா. இந்திய மருத்துவக்கழகத்தின் தமிழக உறுப்பினராக தனது உறவினரை வைத்துக்கொண்டு, ஆளுகின்ற அரசின் அடிமைகளை தன்னோடு வைத்துக்கொண்டு நாளைய அதிகாரத்திற்காக போராடிக்கொண்டு இருக்கும் இவர் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பாஜக – அதிமுகவை எதிர்க்கின்ற அரசியலுக்கு எனது இறப்பையும் பிணத்தையும் பயன்படுத்திக்கொள்ள நினைத்து வந்தவர். இவரும் 20 இலட்சம் நிதிஉதவி தருவதாக சொல்லி இருக்கிறார்.

இன்னொருபுறம் ஐயா மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள். நிறைய புலம்புகிறார். நான் டெல்லிவரை சென்று போராடியதற்கும், அதன் பிறகு தற்கொலை செய்துகொண்டதற்கும் வேறு தூண்டுதலே காரணம் என்கிறார். எனது அண்ணன்களில் மூத்தவர் படித்தவர் என்பதும், அவர் இன்றுவரை இந்திய ஆட்சிப்பணியாளர் தேர்வுக்கு தன்னை தயார் செய்துகொண்டு வருகிறார் என்பதும் ஐயா கிருஷ்ணசாமி அவர்களுக்கு தெரியாது போல. பாவம்! ஜெயலலிதாவின் ‘முதல்வர் கோட்டாவில்’ மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்திருந்த தனது மக்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இருக்கை வாங்கியவருக்கு முதல் மதிப்பெண் பற்றியும், அதைப்பெற ஏழைகளின் பிள்ளைகள் அடையும் சிரமங்கள் பற்றியும் கிருஷ்ணசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை? தனது மக்களுக்காக திருவனந்தபுரத்தில் தான் கட்டியிருக்கும் மருத்துவமனைக்கு இந்தியன் மெடிக்கல் கவுன்சிலின் அனுமதி பெறவேண்டும். அதை பெறுவதற்கு எத்தனை ஏழைக்குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை இழந்தாலும் பரவாயில்லை என்பது அவருடைய பிழைப்புவாதம். அவரைச் சொல்லி குற்றமில்லை. அவரை நம்பி அவர் பின்னே நிற்கின்ற தமிழர்களை நினைத்தே வருந்துகிறேன்.

இது ஒருபுறமிருக்க நடிகர் கமலகாசன் வேறு “பிக்பாஸ் நிகழ்ச்சியின்” மூலம் எனக்காக கவலையுற்று கண்ணீர் சிந்தியது காலக்கொடுமை. இந்த மக்களை காலங்காலமாக ஏமாளிகளாக வைக்க நினைக்கும் கோமாளிகளில் இவரும் ஒருவராக இருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது. தனது 64 ஆண்டுகால வாழ்வியலில் இன்றுவரை வயதுக்குவராத அரசியல்வாதியாக தன்னை அறிமுகப்படுத்தி பேசுவதும் ஒரு அரசியலை, ஒரு போராட்ட அழைப்பிதழை நேரடியாக கூடப் பேச துணிவற்ற இவருக்கு எதற்கு இந்த அரசியல் என்ற கேள்வி எனக்கு வருகிறது.

இந்த பிரச்சனையில் மட்டுமல்ல, வேறு எந்த பிரச்சனையிலும் பாஜக அரசு தமிழர் நலத்திற்காக செயல்படுவதில்லை என்பதும், தமிழர்களின் அடையாளங்களை அழித்து, அவர்களை அடையாளமற்ற இனமாக உருவாக்குவதும் தனக்கு கிடைத்திருக்கும் ஐந்தாண்டுகாலத்தில் செய்யவேண்டிய அஜெண்டாவாகக் கொண்டு செயல்படுகிறது.

நான் உயிரோடு வாழ அரசியல் செய்யத் தவறியவர்கள், எனது உயிரற்ற உடலை அவர்களின் அரசியலுக்காய் விலைபேசுகிறார்கள். இதெல்லாம் இருப்பினும், எனது கழுத்தை இறுக்கிய தூக்கு கயிறினும் கொடுமை. இவர்கள் மீது நான் பெரிதாக கோபப்படப் போவதில்லை. ஏனெனில், இந்த அரசியல் ஏமாற்று பேர்வழிகளின் குலத்தொழில். எனது கோபமெல்லாம் உண்மையில் எனது இறப்பில் வருத்தமுறும் உங்கள் மீதுதான்.

என்ன தகுதி இருக்கு உங்களுக்கு என் இறப்பின் சோகத்தை பகிர்ந்து கொள்ள ?

சாதியில்லை, மதமுமில்லை என்று உங்களுக்காக உழைத்த எவரையாவது நீங்கள் இதுவரை அங்கீகரித்தது உண்டா ? ஓட்டுக்கு காசுவாங்காமல் ஓட்டுப்போட்டதுண்டா ?

உங்கள் ஊர்களில் அள்ளப்படுகின்ற மணலிற்க்காக, உங்கள் ஊரில் வெட்டப்படுகின்ற மரத்திற்காக, உங்கள் ஊரில் விற்கப்படுகின்ற மதுவிற்க்காக, உங்கள் ஊரில் நிகழுகின்ற சாதி சண்டைகளுக்காக, உங்கள் ஊரில் செயல்படுகின்ற சாதி சங்கங்களுக்காக, உங்கள் ஊரில் மறுக்கப்படுகின்ற உரிமைக்காக ? என்றைக்காவது வருந்தியதோ, போராடியதோ உண்டா ? இவைகளில் எதையும் செய்யாமல் என் போன்றவர்களின் உயிர்தியாகத்தை புனிதப்படுத்திக்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள் ?

இவ்வளவு ஏன் ? இறந்துபோன எனது பிணத்தின் மீது அரசியல் செய்கின்ற இந்த அரசியல்வாதிகளில் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பிரச்சனைக்காக துண்டுப்பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி என்றும் பாராமல் கைதுசெய்யப்பட்டு குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதியை காட்க, மீட்க இவர்கள் செய்யும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ன ? ஸ்டாலின் பொதுக்கூட்டம் போட்டு வளர்மதியின் கைதைக் கண்டிப்பாரா ? அவரின் விடுதலைக்கு பாடுபடுவாரா ? மத்திய-மாநில அரசுகளை நேரடியாக எதிர்க்க வக்கற்ற இவர்களுக்கு எனது இறப்பு கையில் கிடைத்த துருப்புச் சீட்டு என்பதை மிகவும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். எனது கோரிக்கை வெல்ல இவர்கள் ஒருபோதும் பாடுபடப் போவதில்லை. அவர்களின் அரசியல் கோரிக்கையை இந்த சம்பவத்திற்கு ஈடாகப் பயன்படுத்தி பெற்றுக்கொள்வார்கள் என்பது மட்டும் உண்மை.

இந்த வருடம் எனது மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதிற்கு காரணம் மத்தியில் ஆளுகின்ற பாஜக, அதன் கைப்பாவை அதிமுக, முந்தைய காங்கிரஸ், திமுக கட்சிகள். உண்மையில் என்மீது அனுதாபமுற்ற இதயத்தை கொண்டவர்களில் எத்தனை பேர் அந்த கட்சிகளுக்கு எதிராக களமாடப் போகிறீர்கள்? சாதி என்பது நூற்றாண்டுகால சாபம். இதைத் துடைக்கவேண்டியது யாருடைய கடமை ? நம்மின ஒவ்வொருவரின் கடமையில்லையா ?

அந்த 10*12 அடி ஹாலோபிளாக் சுவரினால் ஆன வீட்டில், அந்த பூட்டிய இரும்பு பெட்டியில் தேக்கிவைக்கப்பட்டது எனது கனவு மட்டுமல்ல. என்னை 7 வயதில் அனாதையாக விட்டுவிட்டு இறந்துபோன எனது அம்மாவின் கனவு. என்னுடைய எழுவயதில் இறந்துபோன என் அம்மாவிற்கு தெரியாது, 17 வயதில் தனது கனவு இறந்துபோக தானும் இறந்துபோவாள் தன் மகள் என்று. ஆனால் அது நடந்துவிட்டது. நான் 10 வகுப்பில் தேர்ச்சி பெற்று 476 மதிப்பெண் வாங்கிய தினத்தில் இருந்து எனக்கு 24 என்ற எண்ணை பிடிக்காது. ஏனெனில், 24 மதிப்பெண் இன்னும் கூடுதலாக எடுத்திருந்தால் 500/500 என்றாகி இருக்குமே என்று. அதைப்போலவே +2விழும் 1200/1200 இங்கு 24 மதிப்பெண் இல்லை, அப்பொழுது 24 மீது வெறுப்பு இருந்தது. ஆனால், இப்போது இல்லை. ஏனெனில் இறப்பவளுக்கு எதற்கு இத்தனை மதிப்பெண்?

எனது இரங்கலில் கலந்துகொண்ட, கண்ணீர் சிந்திய எல்லா அரசியல்வாதிகளும் போலியானவர்கள் இல்லை. அவர்கள் இதயத்திற்குள் இருக்கின்ற அழுகையையும், அதிகாரமற்ற அவர்களின் ஆற்றாமையையும் என்னால் உணரமுடிகிறது. அது உங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். அதனால்தான் அவர்களின் பெயர்களை இங்கே சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

இன்று கல்வி என்பது மிகப்பெரிய பொருளாதாரச் சந்தையாக இருக்கிறது. இந்த சந்தையின் காரணமாகவே பொருளாதாரப் போட்டி நிகழ்கிறது. இந்தச் சந்தையில் கொடிகட்டி பார்ப்பவர்கள் தனியார் முதலாளிகளே. எனது இறப்பின் சோகமும் காரணமும் அறிந்த எந்த ஏழைவீட்டு குழந்தையாவது இனி அரசுப்பள்ளிகளில் சிறப்பாக படித்து உயர்மதிப்பெண் பெற முயற்சிக்குமா? அப்படிப் பெற்றாலும் பயன் இருக்குமா? இந்த கேள்விகளுக்கு எனது மரணம் ஒரு காரணமாக அமைந்து விடுமோ என்ற குற்ற உணர்வு என்னை கொல்கிறது. எனது இறப்பின் தாக்கம் கூட தனியார் முதலாளிகளுக்கு இலாபமாக போய்விடுமோ என்றும் அஞ்சுகிறேன். இவையெல்லாம் நடக்காமல் இருக்க ஒரே வழி கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் பொதுவாக கொண்டுவருவதே. இதை இந்த மண்ணில் செய்ய எந்த அரசியல் கட்சிகள் முன்வரும்? எந்த கட்சியின் கொள்கையில் கல்வி இலவசம் என்று வருகிறது? தேடிப் புரிந்துகொள்ளுங்கள். புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

இன்றைய தினத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராடி வருகின்றார்கள், உணர்வாளர்கள் போராடிவருகிறார்கள், இந்த போராட்டங்கள் எல்லாம் உண்மையான அரசியல்மயப்படுத்தப்பட்டு ஒன்றாக இணைத்தால் மட்டுமே நாளைய கொடுமைகள் தடுக்கப்படும்.

அழுகையினால் எதுவும் மாறாது..
ஆறுதலினால் காயங்கள் தீராது…
புரட்சியின்றி எதுவும் நடக்காது...

என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த அனிதாவின் ஆன்மா உங்களோடு பேச நிறைய இருக்கிறது. நான்பேச மறந்து என்னவென்று உங்கள் நினைவில் இருக்கிறது. உயிர்போனால் மட்டும் பிணமல்ல, உணர்வுபோனாலும் பிணம் என்பதை நீங்கள் உணரும் நாளில் இங்கே எல்லாம் சரியாக நடக்கும். ஒரு பொது நோக்கிற்காக இறந்தவர்களின் ஆன்மா வாழ்கின்ற உங்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறது. இதுவரை ஒரு பிணத்தின் ஆன்மாவோடு பேசியமைக்கு நன்றி. நான் உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை, எனக்கு சேர்த்துதான் நன்றி சொல்கிறேன்.

என்னை தன்னில் ஒருத்தியாக உளமார நேசித்த அரசியல் தலைவர்களுக்கும்(யார் என்று உங்களுக்கே தெரியும்), உணர்வாளர்களும், உலகமெங்கும் எனக்கு இரங்கல் செய்துகொண்டு இருக்கின்ற தமிழுறவுகளுக்கும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன்று போராடிக்கொண்டு இருக்கிற, போராட தயாராகிக்கொண்டு இருக்கிற அனைவருக்கும் எனது நன்றிகள்

இப்படிக்கு

1176/1200 அனிதாவின் ஆன்மா

  • ஆன்ம ஒலியின் மொழிவடிவம் – செந்தில்நாதன் சேகுவேரா

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *