அன்று கச்சத்தீவு, இன்று தனுஷ்கோடியா ?

அன்று கச்சத்தீவு, இன்று தனுஷ்கோடியா ?

 

தனுஷ்கோடியில் நீராடச்சென்ற “ஜெமினியும்”, “சாவித்திரியும்” மாயமானார்கள் என்ற செய்தி 1964, டிசம்பர் 23 ஆம் தேதி அதிகாலையில் அனைத்து செய்தித்தாள்களிலும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழரின் தொன்மைவாய்ந்த இடமும், ஏறக்குறைய தனுஷ்கோடியை சுற்றி அமைந்திருந்த 5 கிராமங்களில் வசித்த 3000 எண்ணிக்கைக்கும் அதிகமான மக்களை இழந்தோம் என்ற சோகத்தையும் இந்த பரபரப்பையும் ஒருங்கே அனுபவித்த நாள் அன்று. தனுஷ்கோடி அழிய தொடங்கிய கதை அது.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. தனுசு என்ற வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான்.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வழுவிழந்து ஈழத்தை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல் டிசம்பர் 22 ஆம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன்பின், வங்க கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான் 23 ஆம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது. இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டிபோட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில், பாம்பன்-தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலான “போர்ட் மெயில்” என்ற தொடர்வண்டியும் ஒன்று.

 

இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கையை அடையலாம். இது தவிர, தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது.

இத்தகைய ரயில் 1964, டிசம்பர் 23 ஆம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில், பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால், தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை. கடும் இருட்டில் மழையும் கொட்டியதால் ரயில் டிரைவரால் அந்த சிக்னலை பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர். ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்திகூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது.

இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. அங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது (“அன்பே சிவம்” கமலஹாசன் தனது அப்பா தனுஷ்கோடியில் இறந்துபோன விதத்தை எளிமையாக மாதவனிடம் சொல்வதை நினைத்துக்கொள்ளுங்கள்). இதில் 3000 க்கும் மேற்ப்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது.

ஊரையே தனக்குள் உள்வாங்கி கொண்ட வங்க கடலால் வளைக்க முடியாமல் போனது தனுஷ்கோடியில் இருந்த துறைமுக பாலமாகும். அந்த அளவிற்கு அந்த பாலம் உலோக கலவைகளால வார்க்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இனி கப்பல் போக்குவரத்தினை இயக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால், கப்பல் பயன்பாட்டிற்கு உதவிய துறைமுக பாலம் புயலுக்கு பின் அப்பகுதியில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு உதவி வந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

ஆனால், உருக்கி ஊத்தப்பட்ட உலோகங்களால் உருவான இந்த பாலம் ஆட்சியாளர்களின் கண்களை  கண்களை உறுத்தியது. இதனால், கடந்த 1990களின் துவக்கத்தில் இந்த பாலம் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் பாலத்தினை துகள் துகளாக பெயர்த்தெடுத்து சென்றனர். இப்போது, அந்த பாலத்தை கட்ட வேண்டும் எனில் பலகோடி தேவைப்படும். ஆனால், பாலத்தை ஏலம் விட்டதின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாயோ சொற்பமான தொகைதான். பாலத்தினை ஏலம் எடுத்தவர்களுக்கும் அதற்கு உதவிய மக்கள் பிரதிநிகள் சிலரும் அடைந்ததோ கொள்ளை லாபம்.

இந்த பாலத்தினை தொடர்ந்து பராமரித்து இருந்தால் சேதுசமுத்திர திட்டதிற்கும், வரும் காலங்களில் தனுஷ்கோடி பகுதிகளில் ஏற்பட உள்ள வளர்சிக்கு பெரிதும் உதவியிருக்கும். மேலும், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நாட்டினால் நம் நாட்டிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க நமது கடற்படை கப்பல்களுக்கு இந்த பாலம் இன்றியமையாததாக இருந்திருக்கும்.

கடந்தகால சோகங்களையும், கண்ணீரையும் சுமந்தபடி இன்றும் கூட அலைகளின் ஆர்ப்பரிப்பில், சிதிலமடைந்த தேவாலய அடையாளங்களின் நினைவுகளோடு நிற்கிறது தனுஷ்கோடி.  தனுஷ்கோடியின் இன்றைய நிலை கொடுமையாக உள்ளது. எங்குபார்த்தாலும் குப்பைமேடுகள், அங்கங்கே கூடாரங்களை அமைத்து வாழும் 500 இங்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள், 4 ஆசிரியர்களை கொண்ட நடுநிலை பள்ளி என  இருக்கிறது. தனுசுகோடியில் இருந்து சரியாக 22 கிலோமீட்டரில் உள்ள ராமேஸ்வரம் எல்லா வசதிகளையும் பெற்ற இடமாக உள்ள நிலையில், “இயற்கை கடற்கரை ” கொண்ட தனுஸ்க்கோடி ஊர்மட்டும் குப்பைமேடாக காட்சி தருவதோடு மட்டுமின்றி எந்தவித அடிப்படை வசதிகளும் அரசினால் செய்துகொடுக்க படாதா இடமாக தனுஷ்கோடி மாற்றப்படத்திற்கு உள்நோக்கம் இருக்கிறது.

உலகின் துவக்கத்தில் எந்த இடமும் உலகில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகத்தான் இருந்தது.  நாகரிக வளர்ச்சி தனது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிசெய்யும் தேவைகளை உருவாக்கி கொண்டதே. அந்தவகையில் நாம் உற்றுநோக்கும் போது 1964 லில் டிசம்பர் 23 நடந்த மன்னார் வளைகுடா புயல், 2004 இல் டிசம்பர் 26 அன்று நடந்த சுனாமி புயல் என எத்தனையோ அடுத்தடுத்த கடல் அழிவுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்னையில் வெல்லபேரழிவு நேர்ந்தது. ஆனால் மூன்று மாதத்திற்குள் எல்லாம் சரி செய்யப்பட்டு மீண்டது. ஆனால் 1964 இல் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி இன்றுவரை சரிசெய்ய படாமல் இருக்க காரணம் என்ன ? ஏறக்குறைய 53 வருடங்களாக அந்த நிலத்தில் இருக்கின்ற நிலப்பகுதிகள் சீரமைக்கப்படாமல், உடைந்த கட்டிடங்கள் புனரமைக்க படாமல், இருக்கவேண்டிய அவசியம் என்ன ? இவளவு பேரழிவிற்கு பிறகும் அந்த மண்ணைவிட்டு அகலாமல் இருக்கின்ற 700 மீனவர்களின் வாழ்வை, வாழுமிட பாதுகாப்பை, தகவல் தொடர்பு வசதிகளை, மின்சாரத்தை செய்துகொடுக்காமல் இந்த அரசு இருக்க காரணம் என்ன ?

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய்விடவில்லை, மறுத்து போய்விட்டது.. தனுஷ்கோடியில் இருக்கும் மீனவ குடும்பங்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

இன்றைய தனுஸ்கோடியில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து, குடிநீர் வசதி என்று எந்த அடிப்படை வசதியும் இன்று கிடையாது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும் கடலை மட்டுமே நம்பி 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கற்றது கடலளவு என்று இருந்த தனுஸ்கோடி மீனவர்களின் குழந்தைகளுக்கு 2004ஆம் ஆண்டில்  ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் அனைவருக்கும் கல்வி திட்டதின் மூலம் ஓராசிரியர் பள்ளியை மாவட்ட நிர்வாகம் உருவாக்கித் தந்தது. இன்று அரசு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்திருக்கிறது. வெறுமனே பெயரில் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டிருக்கும் இப்பள்ளியில் நடுநிலைப்பள்ளிக்குரிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததுதான் வேதனை தரக்கூடிய செய்தி.

8ம் வகுப்பு வரையிலும் உள்ள இந்தப் பள்ளியில் 73 மாணவர்கள் படிக்கிறார்கள். 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள். பைபர் பொருட்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் தனுஸ்கோடியின் கடல் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. கட்டிடத்தின் கூரை அடிக்கடி பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிக்கூடத்திற்கு வழங்கப்பட்ட கணினி, தொலைக்காட்சி ஆகியற்றை மின்சாரம் இல்லாதால் இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை. குடிநீர் கிணற்றை தூர் வாராமல் மாசு அடைந்தும், கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் மணல் மூடிக்கிடக்கிறது.

இவ்வாறாக எவ்விதமான அடிப்படை வசதிகளுமே இல்லாமல் மழையிலும், வெயிலிலும், கடூம் கடல் காற்றிலும் பயிலும் மாணவர்களின் சிரமங்களை சில சொற்களில் சொற்களில் அடக்க முடியாது. தனுஸ்கோடி பள்ளி என்றாலே அலறியடித்துக் கொண்டும் ஆசிரியர்களுக்கு மத்தியில் இப்பள்ளியின் பணிபுரியும் பிரான்சிஸ்மேரி, குருஞானேஸ்வரி, முத்துக்குமார், சசிகுமார் ஆகிய ஆசிரியர்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராயர் சத்திரம் வரையிலும் தான் போக்குவரத்து வசதி உள்ளது. அதற்கு மேல் தனுஸ்கோடி வரவேண்டும் என்றால் 3 மணிநேரம்  கடற்கரை ஓரம் நடந்தேதான்  பள்ளிக்கு வரவேண்டும்.

நண்பன் திரைப்படத்தில் கதையின் கிளைமாக்ஸில் தனுஸ்கோடியில் பள்ளியின் ஆசிரியராக நடிகர் விஜய்  நடித்திருப்பார். தனுஸ்கோடி பள்ளியில் மாணவர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்பத்துடன் கல்வியை விஜய் வழங்குவதாக காட்டியிருப்பார்கள். தனுஸ்கோடி மீனவ மக்கள் அதையெல்லாம் கேட்கவில்லை. பள்ளியை கான்கிரிட் கட்டிடமாகவும், கழிவறையையும், கிணற்றையும் புதுப்பித்தும், மின்சார வசதி என ஒரு பள்ளிக்குரிய அடிப்படை வசதிகளைகூட இன்றுவரை செய்துதரவில்லை.

தனுஷ்கோடியின் அரிச்சல்முனையில் இருந்து அங்கு இருக்கின்ற மாணவர்கள் 100 மீட்டர் அளவுகூட கிழக்கு நோக்கி தனது படகினை செலுத்த மறுக்கின்றனர். ராமர் பாலம் என்று சொல்லப்படுகின்ற மணல் மேடுகள் பகுதிகளில் மீன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருந்த போதும் அங்கு உள்ள மீனவர்கள் அங்கு மீன்பிடிக்காமல் இருப்பதற்கு காரணம் இலங்கை கடற்படை. “இந்த பக்கம் செல்லும் போது கொஞ்ச நேரத்துல பலூன் காரனுங்க (பலூன் காரனுங்க என்றால் இலங்கை கடற்படை ரோந்து செய்பவர்கள்) வந்துடுவானுங்க, பலூன் காரனுங்க வந்த உடனே நம்ம ஆளுங்க(இந்திய கடற்படை ரோந்து செய்யும் ஆளுங்க) எங்க போவானுங்க என்றே தெரியாது, இடையில மாட்டுகிட்டோம் அவளவுதான், அடி கொன்னுடுவானுங்க. பலூன் காரனுங்க அரிச்சல் முனை மேட்டில் நிற்க கூட விட மாட்டானுங்க, ராத்திரியில பலூன் காரனுங்க அரிச்சல் முனையில் எறங்கி வேடிக்க பாப்பானுங்க” என்று ஒரு தனுஷ்கோடி மீனவ இளைஞன் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டதை எளிதாக கடந்து போகமுடியாது.

தனுஷ்கோடி இயற்கை அழகு பொருந்திய ரம்மியமான நிலம், கடல்கொண்டது போக மீதம் உள்ள நிலமும் இயற்கை அழகோடுதான் இருக்கிறது. இப்போது இருக்கின்ற நிலமும் கூட ஐரோப்பிய நாடுகளிடம் இருந்திருந்தால் அழகிய சுற்றுலா தளமாக மாற்றி நிறுத்தி இருப்பார்கள். அரிச்சல் முனையில் காற்றினால் ஆக்ரோஷமாக அலைகள் ஒருபக்கம் இருந்தால் அதன் மறுமுனையில் அமைதியான நீர்ச்சுழற்சியோடு இருக்கும் கடல் அலைகள் நம்மை தாலாட்டும். இத்தகைய ரம்மியமான இடத்தை ஏறக்குறைய 53 வருடங்களாக பால்படுத்தி கொண்டிருக்கும் இந்த அரசு இப்போது பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கின்றது.

14/09/2017 அன்று மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக தனுஷ்கோடியை அறிவித்து இருக்கின்றது. இதில் முகுந்த உள்நோக்கம் இருக்கின்றது. அங்கு வாழ்கின்ற ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களை இடப்பெற செய்துவிட்டு இந்த ஆளுகின்ற பாஜக அரசு எதையோ பெரிதாக செய்ய திட்டமிடுகின்றது. தனுஷ்கோடியில் வாழ்கின்ற மக்களுக்கு அந்த இடத்தில் மக்கள் வாழ தகுதியான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவேண்டியது அரசின் கடமை. அதை 1964 இல் இருந்து இன்றுவரை செய்து கொடுக்காதது மாபெரும் கொடுமை.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட பிறகு அந்த பிரச்சனையில் இலங்கைக்கும் – தமிழகத்திற்கும் இடையே வகுக்கப்பட்ட கடல் எல்லை தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை தொடக்கமாக கொண்டே வகுக்கப்பட்டது. தனுஷ்கோடியின் அரிச்சல்முனை அளவீட்டின் படியும் சரிபாதியாக பிரித்த போதிலும் கச்சத்தீவு தமிழகத்தின் கடல் எல்லைப் பகுதியாகவே வருகிறது. தனுஷ்கோடியில் இருக்கும் மீனவ மக்களின் பயன்பாட்டை தவிர்த்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் தனுஷ்கோடியின் அரிச்சல்முனையும் ஏதாவது நல்லுறவின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியாவால் கொடுக்கப்பட்டால், கடல் எல்லை ராமேஸ்வரத்தில் இருந்து வகுக்கப்பட்டால் ஏதன் அடிப்படையிலும் நாம் கச்சத்தீவை சொந்தம் கொண்டாட முடியாமல் போய்விடும். அந்த தொலைநோக்கு திட்டத்தின் முதற்படியாகவே “தனுஷ்கோடி மனித வாழ்க்கைக்கு தகுதியற்ற இடமாக மத்திய-மாநில அரசுகள் இன்று அறிவித்து இருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

எனவே இந்த அறிவிப்பை அரசு உடனடியாக திரும்பப்பெற்று, அங்கே உள்ள மீனவர்களுக்கு வாழத்தகுதியான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியும், தனுஷ்கோடியை புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக மாற்றவும் அரசு விரைந்து செயல்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கட்சிகளும் போராடவேண்டிய தருணமிது.   

  • செந்தில்நாதன் சேகுவாரா

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *