“அப்பா” படம் அல்ல…!

“அப்பா” படம் அல்ல…!  சமுதாயம் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்…!
எது இந்த சமூகச்சந்தையில் அதிகமாக விற்கப்படுகிறதோ, எது அதிகமாக இந்தச் சந்தையில் தேவைப்படுகிறதோ அதைத்தே இந்தச் சமூகம் உற்பத்திசெய்கிறது. இதுதான் மெக்காலேயின் கல்விமுறையின் ரகசியம். வெள்ளையர்கள் தனது அதிகாரத்தைச் சுதந்திர இந்தியாவில் திரும்ப பெற்றுக்கொண்ட பிறகும் தான் உருவாக்கிய கல்விமுறை அவர்களை அடிமையாகவே வைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே மேக்காலே கல்விமுறை. இதன் மீதான எதிர்ப்பை, பள்ளிச்சிறார்கள் கனவுகளை, அந்தச் சிறார்கள் மீது பெற்றோர்கள் வைத்திருக்கும் கனவுகளை மிகவும் எதார்த்தமாகத் திரையில் மொழிபெயர்த்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
1st-july_3000_spicyonion
சமூக மாற்றம் என்பது கல்வி முறை மாற்றத்துடன் தொடர்புடையது என்பதை இத்திரைப்படம் அழகாகச் சொல்லியிருப்பதால் மெல்லாம் நாளைய சமுதாயம் மாணவர்கள் மற்றும் அவர்கள் கற்கும் கல்வியில் உள்ளது என்பதை மிகவும் இலகுவாகச் சொல்லியிருக்கிறது அப்பா.
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” 
என்கிறது நமது வள்ளுவம். நன்றாகப்படி… அதன் நோக்கம் மதிப்பெண் பெறுவதாக மட்டும் இருக்கவேண்டும். நிறைய மதிப்பெண் எடு… அதன் நோக்கம் ஒரு வேலைக்குச் செல்வதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே இன்றைய கல்விமுறையின் நோக்கம். சாதி, மூடநம்பிக்கை, மக்களின் அறியாமை இவை மூன்றுமே மிகப்பெரிய மூலதனமாகப் பயன்படுத்தும் கல்வி கார்பீர்ட்டுகளை தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் படத்தின் எதார்த்த பின்னணி. மூன்று மாறுபட்ட அப்பாக்கள் தனது மகனைச் சமூக மாற்றம் குறித்து சிந்திக்கக் கூடாது,தன் முன்னேற்றம் என்பதில் மட்டும் அக்கறையாக இருக்க வேண்டும்,இந்தக் கல்வி பந்தயத்தில் தன் மகன் எப்படியாவது வெற்றி பெறுகிற குதிரையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கதாப்பாத்திரம் தம்பி ராமையாவிற்கு. மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார். அவர் வரும் அனைத்துக் காட்சிகளிலும் மக்கள் கை தட்டிச் சிரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அந்த கோமாளியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்த பார்வையாளர்கள் சுய விமர்சனத்துடன் ஏற்கிறார்கள்.ஏற்றுக் கொள்ள வைக்கிறார் சமுத்திரக்கனி.
தனியார் திருட்டு தனமாக நடத்த வேண்டிய மது ஆலைகளை, மதுக்கடைகளை அரசே நடத்த, அரசு நடத்தவேண்டிய கல்வி நிலையங்களை மட்டும் திருடுவதற்காக தனியார்கள் நடத்துகிறார்கள் என்பதையும், இன்றைய கல்வி நிறுவனங்கள் அனைத்துமே தனியார் பண முதலாளிகளிடமும், அவர்கள் பணம் சம்பாதிக்கும் இடமாகவும் மாறிப்போய் இருப்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது அப்பா படம். சமுத்திரக்கனியின் மகன் நட்ப்புக்கொள்ளும் இஸ்லாமிய பெண்ணாக வரும் கதாப்பாத்திரம் மிகுந்த எதார்த்தமாகத் தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்  தம்பிராமையா, தனது மகன் வசதி வாய்ப்பு இல்லாத சராசரி பெண்ணைக் காதலிக்கிறான்  என்று நினைத்துப் பேசும் வசனங்கள் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இல்லாதவர்கள் என்றால்,இயலாதவர்கள் என்றால் எதுவும் செய்யலாம் எப்படியும் பேசலாம் என்கிற உடைமைச் சமூக மனநிலையை அந்தக் காட்சி பிரதிபலிக்கிறது.
இளைய பிள்ளைகள் தனது கல்வியியல் சூழலில் கற்றுக்கொள்ளவேண்டிய அனைத்துச் சமுதாய நெறிகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சமுதாய சிக்கல்களையும் பொட்டில் அடித்தாற்போல் காட்டி நடித்து இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. படத்தில் கடைசி 15 நிமிடங்கள் எழுந்து நின்று இரு கைகளைக் கொட்டி பாராட்டத் தோன்றும் அப்பாவின் முக்கிய திரைக்கட்டம். உறைவிட பள்ளிகளின் உண்மை முகம், ஆசிரியர்கள், நிறுவர்னர்கள் இருக்கும் இடங்களில் அடியாட்கள் வலம், எப்படி திருமானவை வாடகை அரங்குகள் தனியார் முதலாளிகள் காசு பார்க்கும் இடங்களாக இருக்கின்றதோ அதைப்போலவே கல்வி நிலையங்களும் இருப்பதைப் படம்பிடித்து காட்டுகிறார் இயக்குநர். மொத்தத்தில் அப்பா படம் சமுதாயம் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *