ஜோக்கர்

“கழிப்பறை கூட இல்லாத ஒரு கிராமத்து வீட்டிலுள்ள இலவச தொலைக்காட்சியில் இஸ்ரோவில் இருந்து இந்தியா ராக்கெட் எய்து சாதனை செய்துவிட்டதாக செய்தி ஒளிபரப்பாகும் காட்சியில் தொடங்குகிறது படம்.

வியாபார நோக்கம் இல்லாத, எதார்த்தமான காட்சியமைப்புகள், நறுக்கான வசனங்களை கொண்டு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர், நடிகர்களை நம்பாமல் கதையை நம்பி மட்டும் படம் எடுத்திருக்கும் இயக்குனரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது, ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்க்கு கூடுதல் பலம் சேர்க்கிறது..

பாப்பிரெட்டி பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் மன்னர்மன்னன் என்ற சாமானிய மனிதன் தான் கதையின் நாயகன்,அவன் தன்னைத்தானே ஜனாதிபதியாக நினைத்து கொண்டு, தோரணையுடன் அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவு போடுகிறான், பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக நாளொரு போராட்டத்தை நடத்துகிறான். யார் இந்த மன்னர்மன்னன் எதற்காக இவ்வாறு மனப்பிறழ்வுடன் நடந்து கொள்கிறான் என்பதற்கான பதிலை ஒரு பின்கதையில் சொல்லியுள்ளனர்

மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை மக்கள் ஜோக்கர்களாக பார்க்கின்றனர் என்பதே படத்தின் கதைக்கரு, ஆனால் அந்த மக்களுக்காக போராடுபவர்கள் யார் என்பதை இயக்குனரே தீர்மானித்து விட்டதில் தான் முரண்பாடு உள்ளது, திராவிட, பொதுவுடைமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இம்மண்ணில் போராளிகள் மற்றவர்கள் எல்லாம் சராசரி அரசியல் வாதிகள் என்று காட்ட முயன்றிருக்கிறார்.

நீதித்துறை,அரசாங்கம்,அரசியல்வாதிகள்,ஊழல்வாதிகள், மக்கள் என அனைவரையும் துணிச்சலுடன் பலமாக சாடியுள்ளார். பன்னாட்டு குளிர்பானம் முதல் உள்ளூர் அமைச்சர்கள் ஹெலிகாப்டருக்கு கீழே விழுந்து கும்பிடுவது வரை விமர்சித்த இயக்குநர் மறந்தும் கூட இன்றைய பிரதான பிரசினைகளான கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியோ, ஈழம் பற்றியோ குறிப்பிட வில்லை என்பதில் இருந்து இயக்குனர் தனது கம்யூனிச சித்தாந்தத்தை மறைக்க தவறிவிட்டார்.

கடந்த அரை நூற்றாண்டுகளாக இந்த மண்ணை ஆள்வது திராவிட கட்சிகள் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்தது, ஆனால் ஏனோ இயக்குனருக்கு  தெரியாமல் போய்விட்டது, அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு மது பாட்டில்கள், பிரியாணி பொட்டலம் கொடுத்து ஆள் சேர்ப்பதாக ஒரு காட்சியில் காட்டுகிறார், ஆனால் சூட்சமமாக அந்த கட்சிக்கு “தமிழர் முன்னேற்ற கழகம்” என்று பெயர் வைத்திருக்கிறார், ஆனால் மதுவும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது திராவிட கட்சிகளின் வழக்கம் என்பதை யாரும் இயக்குனரிடம்  சொல்லவில்லை போல. பெட்ரோல் விலை கூடினால் அதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்றும், பெட்ரோல் விலை குறைந்தால் அதற்கு காரணம் மோடி என்று பாஜக கூறுவது போல, சாதிமறுப்பு திருமணம், மக்களுக்கான போராட்டங்கள் போன்ற காட்சிகளில் திராவிட, கம்யுனிச அடையாளங்களை காட்டுகிறார், ஆனால் மது கொடுத்து ஆள் சேர்ப்பது, கழிவறை கட்டி தராமல் ஏமாற்றுவது போன்ற காட்சிகளில், அவைகள் ‘தமிழர்’ கட்சிகளால் செய்யப்படுவதாக  அடையாளப்படுத்திகிறார், தமிழ்நாட்டில் நடக்கும் நன்மைகளுக்கு எல்லாம் திராவிட அமைப்புகளும், தீமைகளுக்கெல்லாம் தமிழர்கள் காரணம் என்பது போலவும் கூறுகிறார்.

சாதாரண கழிவறை கட்டுவதில் தொடங்கி மணற்கொள்ளை வரை இன்றைய திராவிட கட்சிகளின் ஊழல் அட்டுழியங்களை படம் முழுவதும் வெளிக்காட்டுகிறார் ஆனால் இவற்றை திராவிட கட்சிகள் தான் செய்கின்ற என்பதை முழுப்பூசணிக்காயாய் சோற்றில் மறைக்கிறார்.

வீதியில் இறங்கி போராடுபவர்களை மக்கள் ஜோக்கர்களாக பார்க்கின்றனர் என்று ஆதங்கப்படும் இயக்குனர், வீதியில் இறங்கி போராடும் இரண்டு அரசியல் கட்சி தலைவர்களை கேலி செய்து காட்சி அமைத்திருக்கிறார், இயக்குனரின் கண்களுக்கு அந்த இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஜோக்கர்களாக தெரியும் போது, மக்களின் கண்களுக்கு கம்யூனிச தலைவர்கள் ஜோக்கர்களாக தெரிவதில் ஆதங்கப்பட என்ன இருக்கிறது..?

அதிகாரம் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு என்கிறார், அதே நேரத்தில் அந்த அதிகாரத்தை அடைய போராடும் அரசியல் கட்சிகளை விமர்சித்து, கடைசி வரை வீதியில் போராடிக்கொண்டு இருப்பவன் மட்டுமே உத்தமன் என்று சொல்ல வருவது முரண்பாடுகளின் உச்சம், ஆனால் இங்குள்ள கம்யுனிசவாதிகளுக்கு அது இயல்பான குணம்.

இறுதியில் வீதிக்கு வந்து போராடாத மக்களை மந்தைகள் என்கிறார், ஆனால் அந்த மந்தை கூட்டத்தில் இருந்து தெளிந்து வீதிக்கு வந்து போராடும் ஒரு வளர்ந்து வரும் அரசியல் கட்சியை கேலி செய்கிறார். இவ்வளவு பிரச்சினைகளை கூறிய இயக்குனரால் ஏன் ஒரு இடத்தில கூட இன்று அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளின் பெயரையோ, தலைவர்களின் பெயர்களையோ நேரடியாக படத்தில் பயன்படுத்த முடியவில்லை ? அவ்வாறு பயன்படுத்த முடியாதவாறு எந்த கட்டமைப்பு உங்களை தடுக்கிறதோ, அதே கட்டமைப்பு தான் மக்களையும் வீதிக்கு வந்து போராடாதவாறு தடுக்கிறது என்பதை இயக்குனர் மறந்து விட்டார் ..

கடைசி வரை போராடுபோராடிக்கொண்டே இரு..என்கிறார் ஆனால் தீர்வை சொல்லாமல் போகிறார், கம்யுனிஸ்ட்களின் போராட்டம் தீர்வை நோக்கியது அல்ல என்று சொல்லாமல் சொல்லுகிறார்.

மொத்தத்தில் “ஜோக்கர்” அனைவரும் பார்த்து அதில் கூறப்படுள்ள நுண்ணரசியலை புரிந்து கொள்ள வேண்டிய தரமான படைப்பு ..

  — மு.முத்துக்குமார்

One thought on “ஜோக்கர்

  • 18/08/2016 at 9:16 PM
    Permalink

    நன்று நண்பா துணிச்சலாக கட்சிகளின் பெயரை சொன்னால் அவர் அடுத்த படைப்பு ஒரு கனவாகவே இருக்கும் அவரும் வாழ வேண்டும் அல்லவா..தெரியப்படுத்தியிருக்கிறார் நாட்டின் நிலைமையை.. மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்.ஜோக்கர் ஜோக்கராகவே வாழ்ந்திருக்கிறார்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *