பரியேறும் பெருமாள் – விமர்சனம்

ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் வளர்க்கும் நாயையும் கூட கொல்லும் அளவிற்கு ஜாதி வெறி நாட்டில் உள்ளது என சுட்டி காட்டிய தருணம், தான் செல்லமாய் வளர்த்த நாய் கண் முன் சாவதை பார்த்து அழுத நாயகன் இவ்விரு காட்சிகளையுமே தொடக்க காட்சியாக வைத்து ஆரம்பமே மிக சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குநர்.

தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனும் நாயும் ஒரு குட்டையில் சேர்ந்து குளிக்கின்றனர். ஆனால் அவர்கள் குளித்து செல்வதை கண்ட மேல் சாதி வர்க்கம் அதே குட்டையில் சென்று சிறுநீர் கழிக்கின்றனர்.

அதே ஊரில் முதியவர் ஒருவர்  ஆணவக்கொலைகள் செய்வதை சமூக சேவையாக செய்து வருகிறார். ஓடும் பேருந்தை பிடிக்க இம்முதியவர் ஓடுகிறார். அவரை கரம் கொடுத்து ஏற்றுகிறார் ஒரு இளைஞன். இம்முத்தியவர் பேருந்தில் எறிவிட்டு பேருந்து வேகமாக செல்லும் போது அவன் கையை பேருந்தில் இருந்து பிடுங்கி விட்டு, அவ்விளைஞன் விழுந்தவுடன் உடனே சென்று ஒப்புக்கு அழும் தந்திரம் என படத்திற்கு அடுக்கடுக்காய் திரைக்கதைக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

நாயகனின் தந்தை, பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடும் கலைஞர். அவரை அரைநிர்வாணமாக்கி ஓட வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் அவரை பள்ளத்தில் தள்ளி விட்டி எள்ளி நகையாடி செல்கின்ற காட்சி, உருக வைத்தது. தன் தாய் தந்தையை பார்க்க மருத்துவமனை செல்லும்போது மகன் நடந்ததை விவரிக்க அதை பெரிதும் எடுக்காத தாய், அதைவிட தன் கணவருக்கு ஏற்பட்ட கொடுமைகளை சொல்லும் போது குளமாகியது கண்கள்.

சட்டக்கல்லூரியில் சேரும்போது கல்லூரி முதல்வர் நீ என்னவாக வேண்டும் என கேட்கும்போது, பரியன் நான் “டாக்டர்” ஆகவேண்டும் என்கிறான். அதற்கு அந்த கல்லூரி முதல்வர், இது சட்டக்கல்லூரி, இங்கு படித்தால் டாக்டர் ஆக முடியாது என்று சொன்னதும், பரியன் நான் டாக்டர் அம்பேத்கர் ஆக வேண்டும் என சொல்லும் இடம் சிறப்பு. மாணவன் போன பின்பு அம்முதல்வர் வேலை செய்பவரை  கூப்பிட்டு இவன் சொன்ன அம்பேத்கார் ஆக வேண்டும் என்பதை இவனுடைய அனுமதி படிவத்தில் எழுதி வை, நாளைக்கு இது போன்ற ஆர்வக்கோளாறுகளால் பிரச்சனை வரும்போது உதவும் என சொல்லும் இடம் பரியனையும் அவன் உணர்வையும் கொச்சை படுத்துவது போல அமைந்த இடம் அருமை.

ஜாதி சண்டைகள் வலுக்கிறது. மீண்டும் கல்லூரி முதல்வர் அழைக்கிறார். இப்போதுள்ள கல்லூரி முதல்வர் கீழ் ஜாதி முதல்வர். இந்த முதல்வர் பரியனை கூப்பிட்டு ஜாதி சண்டைகள் இயல்பு தான் எனவும் இப்பொதுவரை வேரறுக்க முடியவில்லை எனவும் கல்வி ஒன்றினால் மட்டும் தான் ஜாதியை வேரறுக்க முடியும் என்று அறிவுறுத்திய இடம் சிறப்பு. ஒரு காட்சி ஒன்றில் கல்லூரி முதல்வர், பேராசிரியை அமர்ந்திருக்க, பேராசிரியை மாணவனை வெளியே விட்டால் செத்துவிடுவான் என சொல்லும்போது அக்கல்லூரி முதல்வர் தானாக சாவதை விட சண்டையிட்டு சாவது மேல் என சொல்லும்போது  தலைவர் மேதகு. வே. பிரபாகரன் ஒரு நொடி கண்முன் வந்துபோகிறார்.

கதாநாயகி ஜோதி என்கிற ஜோ ஒரு வெகுளித்தனமான பெண்ணாக வலம் வருகிறார். ஜாதிய பின்னணியில் வீட்டு மக்கள். ஆனால் கதாநாயகிக்கு ஜாதிய சாயம் இல்லாமல் வளர்க்கப்பட்டாள் என்ற விஷயத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள நெஞ்சம் மறுக்கிறது.

நாயகனை தீர்த்து கட்ட ஜோவின் அண்ணன் ஆணவக்கொலைகள் செய்யும் முதிவரை அணுக, அம்முதியவர் பரியனை தீர்த்துக்கட்ட முயலும் காட்சி இளவரசனின் மரணத்தை எடுத்தியம்பியது.

கடைசியாக தன் மகள் பரியன் மீது கொண்ட காதல் தந்தையின் உள்ளதை சற்றே அசைத்து உங்கள் காதலுக்கு காலம் பதில் சொல்லட்டும். நல்ல நிலைமைக்கு வா என்று அறிவுறுத்துவதிலும் அவர்கள் குடித்து மீதம் வைத்த தேநீரின் அளவிலும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி உள்ளது என முடித்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தொடக்கம் முதல் முடிவு வரை ஜாதியின் பெயரை சொல்லாமல் ஜாதியின் தீமை என்ன என உணரவைத்ததே படத்தின் வெற்றி.

 

அனிதா சீபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *