புகழ்ப்பெற்ற திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு. தமிழ்த் தேசிய இன படைப்புலகம் அடைந்திருக்கிற பேரிழப்பு.

புகழ்ப்பெற்ற திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு. தமிழ்த் தேசிய இன படைப்புலகம் அடைந்திருக்கிற பேரிழப்பு.

– சீமான் அறிக்கை

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்ற செய்திகேட்டு ஆழ்ந்த மனத்துயரில் சிக்கித்தவிக்கிறேன். என் தம்பி முத்துக்குமார் தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களை தன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும் திறமையாளன்.

என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கிய ‘வீரநடை’ திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம் செய்யத்தூண்டியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்து விளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.

அரசியல் களத்தில் நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்து அழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்று தமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்று மறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான் அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின் படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.

என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில் நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும் கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

என்றென்றும் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன் ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிற கனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன் என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்.

போய் வா என் தம்பி!

இம் மொழியுள்ளவரை
உன் கவி இருக்கும்.

தமிழ் உள்ளவரை நீயிருப்பாய்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து இணைப்பில் இருப்போம்.
நன்றி! வணக்கம்!
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *