மாதொருபாகனும்…! மதவாத சக்திகளும்…!

மாதொருபாகனும்…! மதவாத சக்திகளும்…! 
தினமணி, இந்தியன் எஸ்பிரெஸ்சின் பார்ப்பன முகமும்…!
நாமக்கல் பகுதியை சேர்ந்த திருச்சங்கோடு என்ற இடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் அதைச் சுற்றிய பகுதிகளில் வாழுகின்ற மக்களின் வாழ்வியல் சூழல் சார்ந்த நாவலே எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” (ஆங்கிலத்தில் One Part Woman) நாவல். இந்த நாவல் 1940 களில் வாழ்ந்த குழந்தை பேறு அற்ற காளி மற்றும் அவன் உயிருக்கு உயிராக நேசித்த பொன்னா என்ற தம்பதியரின் துன்ப துயரங்களை சித்தரிக்கும் புனைவு. அந்தக் காலத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில், நீண்ட காலமாக குழந்தை அற்ற பெண்கள் விழாக் காலத்தில் முகம் தெரியாத ஆண் ஒருவருடன் உடலுறவுக் கொண்டு கருத்தரித்த நடைமுறை, கடைப்பிடித்த வழக்கம் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இன்றும் அந்த ஊர் மக்களிடம் இதைப் பற்றி பேசினால் அவர்கள் சொல்ல தயங்குகிற உண்மை இது என அறியலாம்.
2009 இல் எழுதப்பட்ட இந்த நாவல் மதவாத ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தூண்டுதலின் காரணமாக, 2014 ம் ஆண்டு இறுதியில், இந்த நாவல்  மீது, அதன் சில பக்கங்கள் பிரதியெடுத்து விநியோகம் செய்யப்பட்டு, திருச்செங்கோட்டில் உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் அமைப்புகள், கோவில் கமிட்டிகள், வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம், கிளர்ச்சிகள் கட்டமைக்கப்பட்டன. பெருமாள் முருகனைத் தனிப்பட்ட முறையில் கொலைமிரட்டல் விடுத்தும், கொடிய அச்சுறுத்தல்களும் விடப்பட்டன.2015 சனவரி 10 ந்தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஒரு ”கட்டப் பஞ்சாயத்து ‘ நடத்தி பெருமாள் முருகனை மன்னிப்பு கோர வைத்தது. இதனால் மனம் வருந்திய பெருமாள் முருகன் “எழுத்தாளர் பெருமாள் முருகன் செய்துவிட்டான்” என அறிவித்து விட்டு கல்லூரி பேராசிரியர் ஆன அவரும், அவரது துணைவியாரும் சென்னைக்குப் புலம் பெயர்ந்த சோகமும் அரங்கேறியது.
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, 2015ல் தொடுத்த வழக்கில், எதிர் தரப்பில் தமிழக அரசாங்கம், மாவட்ட நிர்வாகம் ஆகியோரோடு அர்த்தநாரீசுவரர் கிரிவல சங்கம், இந்து முன்னணி சின்னுசாமி & மகாலிங்கம், கொங்கு வேளாள கவுண்டர் சங்கம், நாட்டு வேளாள டிரஸ்ட், செங்குந்தர் மகாஜன சங்கம், ‘கோகுல்ராஜ் கொலை புகழ்’ யுவராஜூன் தீரன் சின்னமலை பேரவை போன்றவை தன்னையும் இணைத்துக்கொண்டு பெருமாள் முருகனுக்கு எதிராக நின்றது. இந்தப் பட்டியலை பார்க்கும் போதே இந்த வழக்கின் பின்னணியில் உள்ள சக்திகளை நான் அடையாளம் காணலாம்
தலைமை நீதிபதி S.K.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு, கடந்த ஜூலை 5ந் தேதியன்று 160 பக்கத்தில் விரிவான தீர்ப்பை வழங்கியது.
1) நாவலுக்குத் தடை விதிக்க முடியாது
2) பிடித்தால் படியுங்கள், இல்லை எனில் மூடிவிடுங்கள்
3) படைப்பாளிகளின் கருத்துரிமையைப் பாதுகாக்க தமிழக அரசாங்கமானது, கலை இலக்கிய வல்லுநர்கள் குழு ஒன்றை 3 மாத காலத்திற்குள் அமைக்க வேண்டும்.
‘2009 ல் வெளிவந்து, பல்வேறு பாராட்டும், விருதுகளும் பெற்ற இந் நாவல், 2013 ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர்தான், சமூகத்தின் ஒரு பிரிவினரால் எதிர்ப்பு உருவாக்கப்பட்டது, ஏன்? ‘ என்ற அய்யத்தைத் தீர்ப்பு  எழுப்பியது.
“வேதகாலம் தொடங்கி காம இலக்கியம், புராதன, மத்தியகால செக்ஸ் நடைமுறைகளை பல்வேறு புத்தகங்கள் சொல்லியுள்ளன….மகாபாரதம் உட்பட இந்திய வேதங்கள் திருமணத்திற்கு வெளியிலான பாலியல் உறவை (அதுவும் கருத்தரிப்பது என்பதற்காகவே இருந்ததை) வெளிப்படையாக சுட்டிக் காட்டியுள்ளது. இதனால் மகாபாரதமும், வேத இலக்கியங்களும், வழக்கத்திற்கு மாறான காம இச்சை மிக்க ஒன்றை சொல்வதாகக் கூறித் தடை செய்யப்பட வேண்டும் எனக் கோரலாமா ?” எனக் கேள்விகளையும் எழுப்பியது.
தீர்ப்பு வந்த இந்தச் சூழலில் ஜூலை 8 ந் தேதியை ஆங்கில நாளேடு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், “மாதொரு பாகன், சாத்தானிக் வெர்சஸ், பாலியஸ்டர் பிரின்ஸ் ” என்ற தலைப்பில் குருமூர்த்தி கட்டுரை எழுதியுள்ளார். ஜூலை 9 மற்றும் 10 தேதிகளில்  தினமணியில் இக்கட்டுரை “கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல! “என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. ஒன்றிரண்டு பாராக்களைத் தவிர இரண்டும் ஒன்றே தான். ஆங்கில கட்டுரையின் விஷக் கொடுக்குகளுக்கு கூடுதலான கருத்து விஷத்தை/ஒரு பாரா இணைப்பை தமிழ்க் கட்டுரை கொண்டுள்ளது.
சாலமன் ருஸ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ மற்றும் ‘ரிலையன்ஸ்’ திருபாய் அம்பானியைப் பற்றி ஹமிஸ் மெக் டொனால்ட் எழுதிய ‘பாலியஸ்டர் இளவரசன்’ ஆகியவற்றின் மீதான தடை, தாக்குதல்கள் ஆகியவற்றை எல்லாம் ஒப்பிட்டு மாதொருபாகன் தடை ஏன் செய்யப்படவில்லை எனக் கேள்வியை எழுப்புகிறார். இவர் பெருமாள் முருகனின் நாவலை கேவப்படுத்துகிறாரா ? இல்லை சாலமன் ருஷ்டி மற்றும் டொனாட் தரப்பை நியாப்படுத்துகிறாரா எனத் தெரியவில்லை. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் குருமூர்த்தியின் கட்டுரையை விட அதிக சாதிய பகைமையைத் தூண்டுகிறது தினமணியில் வந்த கட்டுரைகள்.
கட்டுரையில் பின்வருமாறு சொல்கிறார் :
“திருச்செங்கோட்டில் நடைபெறும் /நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவை, சிற்றின்பக் காமக் களியாட்டாக் கூத்தாகவும், 30 வயதிற்கு மேற்பட்ட கொங்கு வேளாளர் பெண்கள் மீது, தலித் இளைஞர்கள் தங்கள் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் விழாவாகவும் பெருமாள் முருகன் எழுதினார்” என்று அப்பட்டமானப் பொய்யைத் தூக்கிப்போட்டு, குருமூர்த்தி கவுண்டர் சாதி உணர்ச்சியை உசுப்பேற்றுகிறார். ஆனால் அந்த முழுநாவலையும் படித்தவன் என்ற முறையில் இதுபோன்ற ஒரு ஒப்பீடு எங்காவது இருந்தால் தினமணி சொல்லவேண்டும்.
மேலும் காளி மற்றும் பொண்ணா வாழ்ந்த கதையமைப்பில் முகம்தெரியாத இளைஞனைக் கடவுளாக பார்ப்பதாகவும், அவ்வாறு கிடைக்கும் பிள்ளை “சாமி கொடுத்த பிள்ளை” என்றுதான் வர்ணிக்கின்றார். மதவாதத்தை போது புத்தியின்படி தலித் மக்களின் குறியீடு குளத்தில் தாழ்ந்தவர்கள் என்பதே. ஆனால் கதையின் ஒப்பீடு அவர்களைக் கடவுளாக பார்ப்பது. இதற்கு என்ன சொல்கிறது தினமணி ?
கட்டுரையின் (பகுதி 1)
“இதே கதைக்கருவை சற்று மாற்றி, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த ஆண்கள், பெருமாள் முருகன் குறிப்பிடும் இன்னொரு சமுதாயப் பெண்களைக் கருத்தரிக்கச் செய்வதாக இருந்திருந்தால், இதே பிரச்சினை மிகப்பெரிய வன்முறையைத் தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்து விட்டிருக்கும். அப்போது இதே முற்போக்குவாதிகள் பெருமாள் முருகன் ஆதரவுக் குரல் எழுப்பி இருப்பார்களா? “
மலைவிட்டு இறங்கும் அந்த ஆண்மகன் பற்றி எந்தச் சமுதாய விளக்கங்களும், குலக்குறியீடும் கதையில் இல்லை என்பது மிகவும் கவனிக்க வேண்டியது. அப்படி இருக்கும் சூழலில் இதுபோன்ற கேள்விகள் இந்துத்துவாவின் முகங்கள் என்றே சொல்லவேண்டும்.
இந்துத்துவா வெறி பிடித்த  சிந்தனையாளர் குருமூர்த்தி, RSS ஆதரவு Indian Express & தினமணி நாளேடுகள் உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் இதுபோன்று கருத்துக்களைக் கட்டுரை வாயிலாகத் திணிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகாதா ? இதைக் கேட்டால் கருத்து சுதந்திரம் என்பார்கள். இந்துத்துவா வாதிகளுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் ஒரு எழுத்தாளனுக்கு இருக்காதா என்றால் குதிப்பார்கள். எது எப்படியோ தீர்ப்பு வந்த பிறகும் பழையயுத்தியான அதே முறையில் வெள்ளாளக் கவுண்டர்கள் மத்தியில் சாதீய வெறியைத் தூண்டுகின்றன. அடுத்தச் சுற்று கலாட்டாக்களுக்குத் தயார் செய்கின்றன. அதே சமயத்தில் தலித் மீதான  வெறுப்பையும் உசுப்பேற்றுகின்றன. தலித் சமுதாயத்தை சீண்டுகின்றன; அவமானப்படுத்துகின்றன.
போதாக்குறைக்கு ஐயா ராமதாஸ் வேறு பெருமாள் முருகனின் தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்லி , எழுத்து சுதந்திரத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் நாம் சொல்வது, உயர்நீதி மன்றம் தீர்ப்பில் சொன்னதுதான். ஐயா ராமதாஸ் அவர்களே “பிடித்தால் படியுங்கள், இல்லையேல் மூடிவைத்துவிட்டுப் பொங்கல்”. பெருமாள் முருகனின் நாவலுக்கு இனி தடையில்லை.
– செந்தில்நாதன் சேகுவேரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *