வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

பெண் என்றால் பூவினும் மெல்லியவள்! வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு என்று பேசிக்கொண்டிருந்த காலத்தில், கணவனை இழந்த கைம்பெண் வீட்டுக்குள்ளே முடங்கி அடங்கி ஒடுங்கி கிடப்பதுதான் விதி என்னும் சதியின் முகத்தில் காரி உமிழ்ந்த மானமறத்தி!

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! – என்ற பெரும்பாவலன் பாரதியின் பாட்டுக்கு அன்றே பொருளாய் வாழ்ந்த மாதரசி!

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி!

இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குல மாதரின் குலவிளக்கு!

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு இன்று (25-12-2018) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுச்சுடரேற்றி மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், இராஜேந்திரன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *